சென்னை வளசரவாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் மாணவர் திக் ஷிக், உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது, தனியார் பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு நடந்திருப்பது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதற்கு பள்ளி நிர்வாகம் தான் முழு பொறுப்பு. விபத்துக்குள்ளான உடனே மாணவனுக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் பள்ளி நிர்வாகம் அதனை செய்யாமல் இருந்ததே மாணவனின் உயிரிழப்புக்கு காரணம். இனி வரும் காலங்களில் இது போல் நடக்காமல் இருக்க பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.