மாசி மகத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கோவில் நகரமான கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் போன்ற ஆறு சிவன் கோவில்களில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் 12 மணியளவில் இந்த ஆறு சிவன் கோவில்களிலும் உள்ள சுவாமி மற்றும் அம்பாளுக்கு மாசி மகம் குளக்கரையில் வைத்து தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பாணபுரீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், கொட்டையூர் கோடிஸ்வர சாமி போன்ற ஆறு சிவன் கோவில்களில் இருந்தும் சுவாமி மற்றும் அம்பாள் மாசி மகம் குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிதுள்ளனர். அதுபோக அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் தீர்த்தவாரி போன்றவைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கொண்டு மாசி மகம் குளத்தில் புனித நீராடியுள்ளனர். மேலும் அகில பாரதிய சன்னியாசி சங்கம் மற்றும் தென் பாரத கும்பமேளா மகா மகம் அறக்கட்டளை சார்பில் மாலை 5 மணி அளவில் மகா தீபாராதனையும் நடைபெற்றுள்ளது.