வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்குமாறு அதிகாரிகள் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான அரியவகை வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் இருக்கும் வளைவுகளில் அமர்ந்திருக்கும் அரியவகை விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, அரிய வகை விலங்குகள் இந்த சாலையில் சுற்றித் திரிவதால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் வனவிலங்குகளுக்கு கட்டாயம் உணவு அளிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இதனை மீறி செயல்பட்டால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.