நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்களின் கைப்பையில் நாட்டுத்துப்பாக்கி இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் தென்காசியை சேர்ந்த சின்னதுரை, சாம்ராஜ் மற்றும் மாரிச்செல்வம் என்பது தெரியவந்துள்ளது. இதில் சின்னதுரை மீது கொலை உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் எதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்னையில் சுற்றி திரிந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.