நடிகை மீரா மிதுன் ஆஜராக கோரி சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நடிகை மீரா மிதுன் அண்மையில் தமிழ் சினிமாவில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசினார். மேலும் பட்டியலின வகுப்பை சேர்ந்த இயக்குனர்களை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டார். அதில் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களை திரைத்துறையை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. அவருக்கு சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.