Categories
தேசிய செய்திகள்

“கைகோர்த்து நடத்தல், ஜாலியான உரையாடல், தடபுடலான விருந்து” ராகுல் காந்தியை வியக்க வைத்த கேரள மக்கள்….!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை 3500 கிலோமீட்டர் தூரத்தை 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக கடப்பதற்கு திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மத்தியில் 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்விக்கு பிறகு ராகுல் காந்தி கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகி விட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு வெளியேறி மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சி அடியோடு அழிந்து விட்டதாக பல்வேறு மாநிலங்களில் பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், அதையெல்லாம் பொய் என்று நிரூபிக்கும் விதத்தில், இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டு ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

இந்த நடை பயணத்தின் மூலம் அடுத்து வரும் தேர்தலில் பெரிய அளவில் மாற்றம் நிகழுமா என்று கேள்வி எழுந்தாலும், கண்டிப்பாக ஏதாவது ஒரு மாற்றம் நிகழும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் நடை பயணத்தை தொடங்கிய போது, தொண்டர்கள் ஆங்காங்கே கூடினாலும், பெரிய அளவில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கூடியதாக செய்திகள் வரவில்லை. ஆனால் தற்போது கேரளாவில் நடை பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை குடும்பம் குடும்பமாக வரவேற்பதும், மாற்றுத்திறனாளிகள், சிறுமிகள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் ராகுல் காந்தியோடு கைகோர்த்து நடப்பதுமான செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது.

இவர்கள் ராகுல் காந்தியிடம் இந்தியாவுக்காக ஏதாவது செய்யுங்கள், தலையெழுத்தை மாற்றுங்கள், எங்கள் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்கள் என்றெல்லாம் கேட்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். அதோடு பாரத் ஜோடா என்ற அதிகாரப்பூர்வ twitter பக்கத்தையும் ஆரம்பித்து அதில் நடை பயணத்தின் போது நிகழும் பல்வேறு விதமான சுவாரசிய நிகழ்வுகளை காங்கிரஸ் கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகள் ராகுல் காந்தியுடன் கைகோர்த்து நடந்தது, சுற்றுச்சூழல் ஆர்வலர் நீலகண்டன் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்திக் கொண்டே நடந்து சென்றது, அங்கன்வாடி ஊழியர்கள் நம்பிக்கையுடன் நடந்து சென்றது, ஐடி ஊழியர்களுடன் கலந்துரையாடல் என சொல்லிக் கொண்டே செல்லலாம். அதன் பிறகு கேரள மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்தும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் ராகுல் காந்தியின் வரவை எதிர்பார்த்து பொதுமக்களும், தொண்டர்களும் ஆர்வத்துடன் காத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.

Categories

Tech |