Categories
மாநில செய்திகள்

“கேஸ் சிலிண்டர்,5 லிட்டர் பெட்ரோல், வெங்காய மாலை”…. அடடே இது அல்லவா திருமண பரிசு…!!

இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்ததால் அவற்றை மணமக்களுக்கு திருமண பரிசாக அளித்து நண்பர்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை 90 ரூபாயும், டீசல் விலை 85 ரூபாயையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. அதேபோல சமையல் எரிவாயு விலை 800 ரூபாய் நெருங்கிவிட்டது. பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் சமையலுக்கு கொசுறாக வாங்கப்படும் கருவேப்பிலை விலையும் 100 ரூபாயை கடந்து சென்றுள்ளது.

வெங்காயத்தின் விலையும் அவ்வப்போது ஏற்றம் அடைந்துள்ளதால் நெட்டிசன்கள் அதைவைத்து மீம்ஸ் வெளியிடும் அளவிற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெட்ரோல் விலை உயர்வால் இரண்டு சக்கர வாகனம் ஒன்று மரத்தின் கிளையில் தூக்கில் தொங்குவது, சைக்கிளில் செல்வது, வீட்டிலேயே பெட்ரோல் செய்வது எப்படி போன்ற வீடியோகளையும் வடிவேலு மற்றும் திரைப்பட பாடல்களை பெட்ரோல் விலை உயர்வு உடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் புதியதாக திருமணமான மணமக்களுக்கு நண்பர்கள் அளித்த பரிசு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. பொதுவாக திருமணத்திற்கு வரும் உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு பணம், தங்க நகை அல்லது சில பொருட்களை பரிசாக வழங்கியுள்ளார். ஆனால் தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வால் திருமண விழாவிற்கு அதனையும் பரிசாக வழங்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் அண்மையில் கார்த்திக் என்பவருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்திற்கு வந்த நண்பர்கள் தற்போதைய காலத்திற்கு மிகவும் தேவையான அத்தியாவசியமான பெட்ரோலையும், எரிவாயு சிலிண்டர், வெங்காய மாலையையும் மணமக்களுக்கு பரிசாக அளித்துள்ளனர். மணமேடையில் இந்த வித்தியாசமான பரிசு அளித்த நண்பர்கள் மணமக்களுடன் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது

Categories

Tech |