சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு ஹோட்டல் உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வடக்கு அவன்யூ மேற்கு தெருவில் அலாவுதீன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதீனா(44) என்ற மனைவி உள்ளார். இவர்கள் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் துரித உணவகம் நடத்தி வந்துள்ளனர். கடந்து 8-ஆம் தேதி உணவு தயாரிக்கும் பணியில் கணவன் மனைவி இருவரும் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதில் சிக்கி கணவன் மனைவி இருவரும் அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி அலாவுதீன் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் மதீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.