கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் 36 அடுத்துள்ள ராஜமலை பெட்டி முடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த ஏழாம் தேதி அன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வசித்து வந்த இருபது வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போயின. வீடுகளின் மேல் பெரும் பாறைகள் உருண்டு விழுந்தன. அதுமட்டுமன்றி தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், வீடுகளை முழுவதுமாக மூடியது. அப்பகுதியில் வசித்து வந்த 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து போயினர். அதில் மூன்று பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மீதமிருந்த 75 பேரும் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டார்கள்.
அதன் பின்னர் தப்பி வந்த 3 பேர் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட அன்று 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 17 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. தற்போது வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மீட்பு பணியில், இன்று மேலும் இரு நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன் மூலம் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி மாயமான பத்துக்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.