தஞ்சை அருகே பணம் திருடியதாக குற்றம் சாட்டி கூலி தொழிலாளி ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒரு மரத்தில் கட்டிவைத்து பிரம்பால் அடித்ததுடன்.அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாபநாசம் தாலுக்கா பூண்டி மேலத்தெருவில் வசித்து வருபவர் ராகுல். கூலித் தொழிலாளியான இவர் பணம் திருடி விட்டதாக குற்றம் சாட்டி அப்பகுதியை சேர்ந்த சிலர் துணியால் ராகுலின் கண்களை கட்டி இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளனர்.
ஒருகட்டத்தில் வலி தாங்க முடியாமல் துடிதுடித்து மயக்கம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார். அப்பொழுதும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் மயக்க நிலையில் இருந்த ராகுலை மீண்டும் தாக்கியுள்ளனர். அத்துடன் இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.