கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இ-ஷ்ரம் அட்டை தற்போது வரை மூன்று கோடிப் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்கள் அடங்கிய புதிய போர்ட்டல் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதில் பல துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்புகள் இடம்பெற்றிருந்தது. மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அவர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதற்காக தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் என்ற அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த அட்டை 38 கோடிக்கும் மேலான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு வைத்து இருந்தது. ஆனால் தற்போது வரை மூன்று கோடி தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இ-ஷ்ரம் திட்டம் அதிக வரவேற்பை பெற்றுள்ள காரணத்தினால் இதில் முன்பதிவு செய்வதற்கு தொழிலாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ரேஷன் அட்டைகள் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற பெயரில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த அட்டையும் ஒரே நாடு ஒரே அட்டை என்ற கொள்கையுடன் வழங்கப்படுவதாக இந்திய அரசின் தலைமை தொழிலாளர் ஆணையரான டிபிஎஸ் நேகி தெரிவித்துள்ளார்.