தமிழகத்தில் கடந்த வருடம் சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் பல அறிக்கைகளை கூறியிருந்தனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மிகாமல் அடகு வைத்து விவசாயிகள் பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டம் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி வழங்குவதில் பல நிபந்தனைகளும் உள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி பெற்றிருந்தால் அவர்கள் நகைக் கடன் தள்ளுபடி பெற இயலாது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியானது. அதேபோல் தனது தேர்தல் வாக்குறுதியில் திமுக அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை வாங்கிய நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திமுக அரசு புதிய நிபந்தனை ஒன்றையும் விதித்துள்ளது. அதாவது நகைக் கடன் தள்ளுபடி பெற சுமார் 35 லட்சத்து 30 ஆயிரம் பேர் தகுதியற்றவர்கள் என்றும், நகைக் கடன் தள்ளுபடி பெறுவதற்கு 13 லட்சத்து 37 ஆயிரம் பேர் மட்டுமே தகுதியுள்ளவர்கள் என்றும் அவர்களுக்கு மட்டுமே கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிவிட்டனர்.
இந்த நிலையில் நகைக் கடன் பெற்ற கூட்டுறவு சங்கத்தின் விவரம், வாடிக்கையாளர் தகவல், குடும்ப அட்டை எண், கணக்கு எண், ஆதார் எண், குறிப்பு எண், தொலைபேசி எண், முகவரி, நகைக்கடன் பெற்றவரின் பெயர் உள்ளிட்ட 51 தகவல்களை சேகரித்து ஆய்வு செய்த பிறகு சரியான பயனாளிகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் நகைக் கடன் தள்ளுபடி பெற 13,50,000 ஏழை எளிய மக்கள் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் மார்ச் 15-ஆம் தேதியுடன் அரசின் தணிக்கை குழு முடிந்து விட்டது. அதன்பிறகு உரிமையாளர்களிடம் நகைகள் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.