இறுதி சடங்குக்கு சென்ற கவுன்சிலரை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பரணம் என்னும் கிராமத்தில் அ.தி.மு.க. கவுன்சிலரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. பிரமுகருக்குமிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் ஒரு இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கு மணிகண்டனின் கார் ஓட்டுநரான குலோத்துங்கன் ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்த போது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவரின் உறவினரான பிரவீன் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் நேரே வந்து ஓட்டுனரின் அருகில் விழுந்துள்ளார்.
அப்போது குலோத்துங்கன் அவருக்கு உதவி செய்ய முற்பட்ட போது, பிரவீன் குமார் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்ததும் மணிகண்டன் அங்கு சென்று நடத்தை கேட்டபோது, ஆத்திரமடைந்த பிரவீன்குமார் தனது வீட்டிற்கு சென்று தன்னுடைய காரை எடுத்து வந்து துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மீது மோதியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக மணிகண்டன் உயிர் தப்பிய நிலையில், அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக வந்த மற்றொரு பெண்ணிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தடுப்பதற்காக பொதுமக்கள் பிரவீன் குமாரை மடக்கி பிடிக்க முயன்றபோது கூட்டத்தில் அவர் காரை தாறுமாறாக ஓட்டியுள்ளார். அதனை மீறியும் பொதுமக்கள் அவரை உயிருடன் பிடித்து இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் பிரவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்து, அவரை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.