மாயாற்றில் நீர்வரத்து குறைந்ததால் கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் சென்ற இரண்டு வாரங்களாகவே தொடர் கன மழை பெய்தது. இதன் விளைவாக மாயாறு, பாண்டியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டது. மேலும் மாயாறு குறுக்கே இருக்கும் தரைப்பாலும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது மழையின் தாக்கம் குறைந்து சென்ற இரண்டு நாட்களாக பகலில் வெயில் காணப்படுகின்றது. மேலும் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து இருக்கிறது. இதையடுத்து நீர்வரத்து குறைந்ததால் தரைப்பாலம் வெளியே தெரிந்தது. இதனால் கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் இயக்க வனத்துறையினர் மற்றும் போலீசார் அனுமதி அளித்துள்ளார்கள். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்திருக்கின்றனர்.