தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து தமிழக அரசு அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இருப்பினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இன்று ( பிப்.16 ) முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை புதிய ஊரடங்கு தளர்வுகள் அமல் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று ( பிப்.16 ) முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகுவதில் இனி எந்த சிக்கலும் இல்லை. அதேபோல் உணவகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். மேலும் அனைத்து உள் அரங்குகளிலும் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.