பொதுமக்கள் குளத்தை மூடக் கூடாது என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து பணிக்கம்பட்டி செல்லும் சாலையில் டிகோட்டாம்பட்டி அருகில் குளம் ஒன்று உள்ளது. மழை நேரங்களில் இந்த குளம் நீர் நிறைந்து காணப்படும். இந்நிலையில் சில மாதங்களாக அந்த குளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. மேலும் கழிவுநீர் உந்து நிலையத்தை அமைப்பதற்காக சிலர் இந்த குளத்தை மூட முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அந்த பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.
இதனையடுத்து மீண்டும் இந்த குளத்தை மூடும் பணியை அவர்கள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் குளத்தை மூடினால் மழை காலங்களில் மழைநீர் குளத்தில் தங்காமல் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் இந்த குளத்தை மூடக்கூடாது எனவும், மறுசீரமைப்பு செய்து தரவேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.