குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் 2 வது நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து காப்பு வாங்கி சென்றனர். கொரோனா பெரும் தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சி பக்தர்கள் யாரும் இல்லாமல் எளிமையான முறையில் நடந்தது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா புகழ் பெற்றது.
மேலும் 2 ஆம் திருநாளான நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆன்லைன் பதிவு மற்றும் நேரடியாக தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொதுவாக பக்தர்கள் கடலில் புனித நீராடி அதன் பின்னர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் நேற்று கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
பொதுவாக பக்தர்கள் கொடியேற்றம் நடைபெறும் அன்று காப்பு வாங்கி கட்டுவது வழக்கம். ஆனால் கொடியேற்றத்தின் போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் நேற்று பக்தர்களுக்கு காப்பு வழங்க கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து கோவில் அலுவலகத்தில் பக்தர்களுக்கும், தசரா குழுவினருக்கும் பல்வேறு எண்ணிக்கையில் காப்புகள் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக நின்று காப்புகளை வாங்கிச் சென்றனர். மேலும் பக்தர்களின் வாகனமானது குலசேகரன்பட்டினம் பைபாஸ் சாலை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.