Categories
மாநில செய்திகள்

குறவர்குடி இனம்: தனிப்பெரும் சமூகமாக அறிவித்திடுங்கள்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

தொல் தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப் பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்ககோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தொல்தமிழ் குறவர்குடி மக்களை இந்திய ஒன்றிய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது வரவேற்கத்தக்கது ஆகும். இருப்பினும் அவர்களின் மற்றொரு மிக முக்கிய, நீண்டகாலக் கோரிக்கையான தமிழ் குறவர்குடி மக்களைத் தனித்த சமூகமாக அறிவித்து, உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நிறைவேற்ற ஆளும் அரசுகள் தொடர்ந்து மறுத்துவருவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதற்கிடையில் ஒடுக்கப்பட்டவர்களில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாகப் பின் தங்கியுள்ள குறவர்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் பன்னெடுங்காலமாகப் பறிக்கப்பட்டு வருவது மாபெரும் சமூகஅநீதியாகும்.

இழந்த தங்கள் உரிமைகளை மீட்பதற்காகப் போராடும் தொல்குடிமக்கள், அதிகாரவர்க்கத்தால் பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த நக்கலே சமூக மக்களை, “நரிக்குறவர்’ எனப் பெயர் மாற்றி அழைப்பதால், தமிழகத்தில் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வகுப்புரிமைகளும் பறிபோவதாகத் தமிழ் குறவர்குடி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, பொருளாதாரம் என தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் வடமாநிலத்தவர்களால் தொடர்ந்து அபகரிக்கப்படும் நிலையில், மிகவும் பின் தங்கியுள்ள மண்ணின் மக்களான குறவர்குடி மக்களின் உரிமைகளும் வெளியில் இருந்து வந்த “நக்கலே” உள்ளிட்ட சமூக மக்களால் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க வேண்டும் என்று கோருவது மிக மிக நியாயமானதே ஆகும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக தொடர் பட்டினி போராட்டம் மேற்கொண்டு வரும் வனவேங்கைகள் கட்சித்தலைவர் அன்புத்தம்பி இரணியன், இன்று உடல்நலம் குன்றி மயக்கமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உரிமைகள் வென்றெடுக்க போராடுவது தான் இருக்கிற ஒரேவழி என்றாலும் தொடர்ச்சியாகப் போராடுவதற்கும், போராட்டத்தை வழிநடத்துவதற்கும் போராளிகளின் இருப்பு மிக அவசியம். இதனால் உடல் நலத்தைக் கருதி தம்பி இரணியன் தமது அறப் போராட்டத்தின் வடிவத்தை மாற்ற வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். வனவேங்கைகள் கட்சியின் உரிமைப் போராட்டம் வெல்லும்வரை நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் எனவும் உறுதியளிக்கிறேன்.

ஆகவே இதற்கு மேலும் தாமதப்படுத்தாது வனம் இழந்து, நிலமிழந்து, உரிமைகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு, விளிம்புநிலையில் நலிந்த மக்களாய் வாழும் ஆதித் தமிழ்க்குடி குறவர்களை மட்டுமே “தமிழ்க்குறவர்” என்ற சிறப்புப் பெயரில் அழைக்க வேண்டும் எனவும் மாற்று மொழி மக்களை அவர்களின் சொந்தப் பெயரில் மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் தமிழ்க் குறவர்குடி மக்களை தனிப் பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்க உடனே அரசாணை வெளியிட வேண்டும் என்றும் இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |