பெரம்பலூரில் குப்பை கொட்டுவதற்கு சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் பகுதியில் சுந்தரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். கவிதா சம்பவத்தன்று வீட்டில் இருந்த குப்பைகளை கொட்டுவதற்காக எளம்பலூர் பிரதான சாலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கவிதாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது கவிதா சுதாரித்துக்கொண்டு தங்கச்சங்கிலியை பிடித்துக்கொண்டார். இதில் 5 பவுன் மர்ம நபர்களின் கையிலும், இரண்டு கவிதா வகையிலும் பிடிபட்டது.
இதையடுத்து அவர்கள் கவிதாவை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் கவிதா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அருகில் இருந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கண்காணிப்பு கேமராவில் சென்று பார்த்த போது மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது தெரிந்தது. அதனை தடையமாக கொண்டு காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.