தொழிலாளி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் இருக்கும் குருசெடியில் ஜான் பிரான்ஸிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான் பிரான்ஸிஸ் தனது வீட்டின் முன்பு கிடந்த குப்பைகளை தீ வைத்து எரித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குப்பையில் எரிந்து கொண்டிருந்த தீ ஜான் பிரான்சிஸ் சட்டையின் மேல் விழுந்தது.மேலும் தீ மளமளவென ஜான் பிரான்சிஸ் உடல் முழுவதும் பரவியது.
இதனால் வலி தாங்க முடியாமல் ஜான் பிரான்சிஸ் அலறி சத்தம்போட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஜான் பிரான்ஸிசை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜான் பிரான்சிஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆசாரிபள்ளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.