சப்-கலெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறாவது மைல் பகுதியில் இருந்து அதிகரட்டி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. இதில் 25 சென்ட் நிலத்தை கால்நடை துறைக்கு ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் சொப் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தாசில்தார் சிவக்குமார், துணை தாசில்தார் சதீஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அதிகரட்டி பகுதியில் வசிக்கும் ஈஸ்வரன், முருகேசன் ஆகிய இரண்டு பேரும் இது எங்களுக்கு சொந்தமான இடம் என்றும், இடத்தை காலி செய்யுங்கள் எனவும் ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எனவே போலீசார் வருவார்கள் என்ற அச்சத்தில் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் ஈஸ்வரன், முருகேசன் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.