சிறுத்தை குதிரையை தாக்கி கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளாளம்-நெல்லுமார் சாலையில் அல்லி உல்லாகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் பண்ணையில் 20-க்கும் மேற்பட்ட குதிரைகளைப் பராமரித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி 5 வயது பெண் குதிரையை மர்ம விலங்கு ஒன்று கடித்து கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பண்ணையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளனர்.
அப்போது பண்ணைக்குள் புகுந்து இறந்து கிடந்த குதிரையின் உடலை சிறுத்தை சாப்பிடும் காட்சிகள் கேமராவில் பதிவாகியது. அதன்பிறகு குதிரையை சிறுத்தை தான் தாக்கி கொன்றது என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.