செஞ்சி அருகே குட்டையில் குளிக்க சென்ற சிறுமிகளில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
செஞ்சி சத்தியமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் அய்யனார். இவருக்கு வனிதா(வயது 12), வினிதா(12), அபிநயா(14) என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில் இருவர் இரட்டை சகோதரிகள் ஆவர். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் தங்கள் மாட்டிற்கு தண்ணீர் வைத்துவிட்டு, அருகில் உள்ள குட்டையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது குட்டையில் ஆழம் அதிகமாக இருந்ததால் திடீரென 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
அதில் வினிதா என்பவர் மட்டும் கரையை பிடித்து கொண்டு குட்டையை விட்டு வெளியேறி கூச்சலிட்டாள். அச்சமயம் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து, குட்டையில் இறங்கி 2 பேரையும் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அதில் ஏற்கனவே வனிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். கவலைக்கிடமாக உள்ள அபிநயா மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.