சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு எதிராக குடும்பப் பிரச்சினைகளும் படுகொலைகளும் அதிக அளவு நடைபெறுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் குடும்பப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு அடிக்கடி பெண்களுக்கு எதிரான படுகொலைகள் நடைபெறுகின்றன. இந்த படுகொலைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதால் சுவிட்சர்லாந்து அரசு இதுகுறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில் கடந்த 2009 இல் இருந்து 2018 வரை 14 நாட்களுக்கு இரண்டு பெண்கள் என்ற வீதத்தில் படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், கடந்த 2020இல் மட்டும் 16 படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 10 பெண் படுகொலைகள் நடைபெற்றுள்ளது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் கொரோனா பொதுமுடக்கதால் மக்கள் 24 மணி நேரமும் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால் அவர்கள் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி அடிக்கடி குடும்ப பிரச்சனைகளில் ஈடுபடுவதால் தான் பெண்கள் படுகொலை அதிகரித்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.