குடும்ப அட்டைதாரர்கள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கட்டாயமாக கூட்டுறவு வங்கிகளில் தங்களது பெயரில் கணக்கு தொடங்க வேண்டும் என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதுகுறித்து நேற்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது.
நமது தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் பிரபலமான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவை அனைத்துக்கும் ஒரே மாதிரியான பெயரை வைத்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய வேண்டும். மேலும் தரமான பொருட்கள் வழங்குவதற்கு ஏதுவாக கூட்டுறவு சங்கங்களில் தரம் பிரிப்பு அலகுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எளிதில் பொருட்கள் கிடைக்கும். மேலும் தமிழகத்தில் உள்ள 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் 19.60 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு தொடங்காமல் உள்ளது. அவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.