மர்ம நபர்கள் ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் ரவிக்குமார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் ஹூப்ளி, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணம் பகுதிகள் வழியாக திருப்பதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்து சுற்றி பார்த்த போது திடீரென ரவிக்குமார் காணாமல் போனதாக தெரிகிறது. இதுகுறித்து ரவிக்குமாரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவிக்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி சரபங்கா ஆற்றுப்பாலம் அருகே நேற்று ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்த நபர் காணாமல் போன ரவிக்குமார் என்பது தெரியவந்தது. மர்ம நபர்கள் அவரை கடத்தி வந்து கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசி சென்றுள்ளனர். எனவே ரவிக்குமாரை கடத்தி கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.