குடும்ப பிரச்சனை காரணமாக கட்டிட தொழிலாளியை வெட்டிக்கொன்ற மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிகோட்டை ரோட்டில் இ.பி காலனி அன்னை சத்யா நகரில் வசித்து வந்தவர் கரும்பாயிரம்(46). இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளார்கள். இவரின் முதல் மனைவி ராதிகா, மகன் 23 வயதுடைய ஜீவா, 20 வயதுடைய விக்ரம் ஆகியோர் அன்னை சத்யா நகரில் குடியிருந்து வருகின்றனர். கடந்த 15 வருடங்களாக திருப்பூரில் உள்ள இரண்டாவது மனைவி 36 வயதுடைய சிவசங்கரியுடன் கரும்பாயிரம் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதன் காரணமாக ராதிகா தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சிங்கப்பூருக்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1 1/2 மாதத்திற்கு முன் சிங்கப்பூரிலிருந்து ராதிகா தஞ்சாவூருக்கு திரும்பி வந்துள்ளார். இத்தகவலை அறிந்த கரும்பாயிரம் திருப்பூரிலிருந்து கிளம்பி தஞ்சையில் இருக்கின்ற முதல் மனைவி ராதிகா வீட்டிற்கு வந்தபோது அவர் தனது இரண்டாவது மனைவியையும் தஞ்சைக்கு கூட்டி வரப் போவதாக கூறினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த கரும்பாயிரம் ராதிகாவை தாக்க முயற்சி செய்தபோது அங்கு இருந்த அவரது உறவினர்கள் தடுத்தார்கள். ஆனாலும் கரும்பாயிரம் மண்வெட்டியை எடுத்து கொண்டு உன்னை கொல்லாம விடமாட்டேன் என்று கூறி தெருவில் சுற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜீவா நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு வீட்டின் அருகில் உள்ள கோவிலின் முன் மதுபோதையில் இருந்த கரும்பாயிரத்தை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் கரும்பாயிரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இத்தகவலை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவு விட்டார்.
இந்நிலையில் நாஞ்சிக்கோட்டை அருகில் சந்தேகப்படும்படி மூன்று நபர்கள் நின்றதாக தனிப்படையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் தான் கரும்பாயிரத்தை கொலை செய்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தமிழ் பல்கலைக்கழக காவல் துறையினரிடம் தனிப்படையினர் அவர்களை ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி ஆகியோர் வழக்கு பதிந்து ஜீவா அவரது நண்பர்கள் மனோஜிப்பட்டி ராஜராஜன் 2வது தெருவில் வசித்த 23 வயதுடைய பெர்க்கின்ஸ், மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி 5வது தெருவில் வசித்த 21 வயது உடைய அந்தோணி ஆகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 அரிவாளையும் பறிமுதல் செய்துள்ளனர்.