சேலம் அருகே குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் பொன்னம்மாப்பேட்டையில் கடந்த சில தினங்களாக சேலம் மாநகரில் தொடர்ந்து கனமழை காரணமாக சீலாவரி ஏரியில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் ஏரியின் அருகே உள்ள ராஜ வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாததால் கால்வாயில் செல்லும் கழிவுநீரில் மழை நீருடன் கலந்து கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது. தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறி உள்ளதால் அப்பகுதியில் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்திருக்கும் மழைநீரை விரைவாக அப்புறப்படுத்தி இனி வரும் காலங்களில் இது போல் தண்ணீர் தேங்காத வகையில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.