குடிநீர் இணைப்பு செய்து தரக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள உலகநாதபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் முறையான குடிநீர் வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் தள்ளுவண்டிகளின் மூலம் வெகு தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பரமக்குடி தாலுகா காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் குடிநீர் இணைப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.