புதுக்கோட்டையில் குடிபோதையில் தங்கையை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி. இவரின் மகள் லோகப்பிரியா (20).சிவகாமியின் கணவரான பழனியப்பன் மின்சார வாரியத்தில் அலுவலராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கணவர் பார்த்து கொண்டிருந்த வேலை சிவகாமிக்கு கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று சிவகாமி வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மகளான லோகப்பிரியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.
மேலும் அவர் கழுத்தில் இருந்த 9 கிராம் செயின், வீட்டில் இருந்த பணம் மற்றும் இருசக்கர வாகனம் காணாமல்போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகாமி உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்ததில் லோகப்பிரியாவின் பெரியப்பா மகனான சுரேஷ் தான் இந்த கொலையை செய்தார் என கண்டுபிடிக்கப்பட்டது. இவர் சிவகாமியின் குடும்பத்திற்கு உதவி செய்வது போல அடிக்கடி வீட்டிற்கு வந்து நோட்டமிட்டுள்ளார்.
இதனையடுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் தக்க சமயம் பார்த்து சிவகாமியின் வீட்டிற்கு வந்து தனியாக இருந்த லோகப்பிரியாவை கொலை செய்து விட்டு நகை மற்றும் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. இதன்பின் உடனடியாக சுரேஷை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.