இன்று மாநிலம் முழுவதும் துக்க நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 26-ஆம் தேதி 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாலம் இடிந்து விழுந்தது. இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நேற்று முன்தினம் பிரதமர் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் மாநில முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது. பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இன்று நமது மாநில முழுவதும் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் தேசியக்கொடி மாநிலத்தில் உள்ள கட்டிடங்களின் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மேலும் இன்று விழாக்களோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ நடைபெறவில்லை என கூறியுள்ளார். மேலும் தொங்கு பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநில முழுவதும் இன்று துக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் மாநிலத்தில் இந்திய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.