மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி அருகில் சர்மா நகர் பி.வி காலனியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி யாஷ்வினி என்ற மனைவியும் ஒரு கைக்குழந்தையும் உள்ளது. தற்போது வெங்கடேஷ் செங்குளம் பகுதியில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் கால்பந்து விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினருக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வெங்கடேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வெங்கடேஷ் உயிரிழந்த சம்பவம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது வெங்கடேஷின் நண்பர்களான சத்தியமூர்த்தி, சிராஜ்சிங், ஜீவா ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது ஜீவா, சிராஜ்சிங், சத்தியமூர்த்தி, வெங்கடேஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து காட்டூர் பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது சிராஜ்சிங்கை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு மற்ற 3 பேரும் சேர்ந்து மீண்டும் மது அருந்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிராஜ்சிங், யஸ்வந்த் என்பவரை அழைத்து வந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கைகலப்பு ஏற்பட்டு யஸ்வந்த், ஜீவா மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை தாக்கியுள்ளார். இதில் தடுமாறி கீழே விழுந்த வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து யஸ்வந்த் மற்றும் சிராஜ்சிங் ஆகிய இருவரையும் ஆவடி டேங்க் பேக்டரி பகுதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.