கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தளர்வுகளின் அடிப்படையில், பல செயல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சமயத்திலும், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் உள்ளிட்டவை திறப்பதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே போல், பொது இடங்களில் மதம், அரசியல் தொடர்பான பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் கொரோனாவை காரணம் காட்டி, கிராமசபை கூட்டங்களைஅரசு ரத்து செய்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூட கிராம சபையை கண்டு அரசு அலறுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
தற்போது இவர்களை தொடர்ந்து நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கிராமசபை கூட்டங்கள் ரத்ததற்கான காரணம் என்ன ? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொரோனா செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா ? என அதிமுக அரசுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.