கிராமப் புறத்தில் இருக்கும் வங்கியில் ஹிந்தியில் பேசும் மேலாளருடன் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரியை அடுத்து இருக்கும் கிருமாம்பாக்கம் பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் இருக்கின்றது. அங்கு வசிக்கும் ஏராளமான விவசாயிகள் இந்தியன் வங்கியில் தங்கள் கணக்குகளை வைத்துள்ளனர். அந்த வங்கியின் மேலாளராக பிரபாத்ரஞ்சன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு சென்று மேலாளரிடம் தமிழில் பேசியுள்ளார். அதற்கு பிரபாத்ரஞ்சன் ஆங்கிலத்தில் பதில் தெரிவிக்க, தனக்கு புரியவில்லை தமிழில் கூறுமாறு வாடிக்கையாளர் கேட்டுள்ளார்.
அதற்கு மேலாளர் தனக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும் என கூறியுள்ளார். இதனால் கோபம் கொண்ட வாடிக்கையாளர் கிராமப்பகுதியில் ஆங்கிலம் தெரியாத மக்கள் வசிக்கும் இடத்தில் தமிழ் பேசுபவரை தானே பணியமர்த்த வேண்டும் என்று வாக்குவாதம் செய்ய இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கி மேலாளர் காவல்துறையினருக்கு போன் செய்துள்ளார். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் வாடிக்கையாளரிடம் பேசி அனுப்பி வைத்தனர்.