புதுவை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டு, கூடுதல் ஆளுநர் பொறுப்பாக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து பேசிய புதுவை அதிமுக சட்டமன்ற அன்பழகன், ஏற்கனவே இருந்த துணைநிலை ஆளுநர் நீக்கப்பட்டு, தமிழ் தெரிந்த, தமிழ் சமுதாயத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அதிமுக சார்பில் மனதார வரவேற்கின்றோம்.
புதுவை முதலமைச்சராக நாராயணசாமி இருந்ததில் இருந்து மத்திய அரசையும், துணைநிலை ஆளுநரையும் தொடர்ந்து எதிர்த்து வந்தார். அவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக செயல்படாமல், மலிவு விளம்பரத்துக்காக ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் போன்று செயல்பட்டார். அவருடைய மோதல் போக்கால்தான் இன்று மாநிலத்தின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
கிரண்பேடியை பொருத்தமட்டில் நல்ல நிர்வாகத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் மக்களுடைய நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு தடையாக இருந்து விட்டார்கள், இது ஒன்றுதான் அவர்கள் செய்த தவறு. மற்றபடிமுதல்வர் நாராயணசாமி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எல்லாம் கிடையாது. இவருடைய போராட்டம் முதலமைச்சராக பதவியேற்று ஆறு மாதத்திலிருந்தே இருந்தது. கிரண்பேடியை மாற்றவேண்டும்…. மாற்ற வேண்டும் என்றுதான் போராடிக் கொண்டிருந்தார். அதனால் அவருடைய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது அல்ல என அதிமுக தெரிவித்தது.