டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு ஊழியர் பலியான நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தருமத்துப்பட்டி கிராமத்தில் மதுரைவீரன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் தண்டபாணி(53) என்பவரும் கன்னிவாடி புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் டீக்கடையில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் மதுரைவீரனும், தண்டபாணியும் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டதால் அடுப்பை பற்ற வைத்தவுடன் 2 பேர் மீதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மதுரை வீரன் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மதுரைவீரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.