ஆட்களை ஏற்றி சென்ற குற்றத்திற்காக 10 வாகனங்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரக்கு வாகனம் லாரிகளில் ஆட்களை ஏற்றி செல்வதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்படி ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் செல்லியம்பாளையம் புறவழிச்சாலை, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது 2 லாரிகள், 5 சரக்கு வாகனங்கள் உள்பட பத்து வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து 10 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வாகன ஓட்டிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மீண்டும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.