பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருக்கும் குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக மாநகர நகர் நல அலுவலர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோன்களுக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அரசினர் பெண்கள் கல்லூரி பின்புறம் இருக்கும் 2 குடோன்களில் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து 10 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின் இரண்டு குடோன்களையும் பூட்டி சீல் வைத்தனர். இதனை அடுத்து பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தாலோ அல்லது பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.