கோவை மாவட்ட பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இதனால் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் மற்றும் குடிமைப் பொருள் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு, பொள்ளாச்சி அருகில் உள்ள ரெட்டியார் மடம் பகுதியில் இருந்து காரில் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவரது உத்தரவின்படி, சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு தலமையிலான போலீசார் அங்கு தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மிக வேகமாக ஒரு கார் வந்தது. உடனே போலீசார் அந்த காரை வழிமறைத்து காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், அவர் பொள்ளாச்சி சேர்ந்த மாதேஸ்வரன் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு காரை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் காரின் பின்பகுதியில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டு இருப்ப தெரியவந்தது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கேரளாவில் கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.