பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 275 ஜோடி வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் போன்றவைகள் வழங்கப்படுவதை தவிர்ப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வெள்ளிக் கொலுசுகள் வழங்கப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் 65 ஜோடி வெள்ளிக் கொலுசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல் கூடலூர் பகுதியிலும் வாக்காளர்களுக்கு கொலுசுகள் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது.. இந்த தகவலின் அடிப்படையில் துணை தாசில்தார் ஜெயசித்ரா தலைமையில் ஒரு குழு அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 210 ஜோடி வெள்ளிக் கொலுசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் 275 ஜோடி வெள்ளிக்கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதன் மொத்த மதிப்பு ரூபாய் 2 3/4 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பின் இந்த கொலுசுகள் அனைத்தும் அரசு கருவூலத்தில் அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.