அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த விசைத்தறி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதிகளில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வெண்ணந்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது வெண்ணந்தூர் தங்கசாலை வீதியில் வசித்து வரும் விசைத்தறி உரிமையாளர் திருநாவுக்கரசு என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த திருநாவுக்கரசு மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.