சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒருவர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி செந்தில்குமார் தலைமையில் நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் நாமகிரிபேட்டை கிழக்கு ஒன்றிய பகுதிகளுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள நாரைக்கிணறு ஊராட்சியில் வசித்து வரும் விவசாயியான மோகன் என்பவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் மோகன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்து மோகனை கைது செய்துள்ளனர்.