கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கர்நாடகா மற்றும் கேரள மாநில வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்பியதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதி வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதோடு பாலக்கரை, மார்க்கெட் அருகே பசுவேஸ்வரர் வீதி, காவேரி நகர், காவிரி வீதி, நேதாஜி நகர், பவானி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் தங்கி உள்ள முகாம்களில் இல்லம் தேடி மருத்துவ குழுவினர் மருத்துவ முகாமை நடத்தி பொது மக்களுக்கு வேண்டிய அனைத்து விதமான மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றனர். மேலும் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு தாசில்தார் மற்றும் பவானி நகராட்சி தலைவர் ஆகியோர் தேவையான உதவிகளை செய்து வருவதோடு மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.