14 வயது சிறுமி காட்டுப்பகுதியில் நான்குபேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மீரட் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு தான் ஆபத்தில் உள்ளதாகவும் தன்னை காப்பாற்றுமாறு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரது பெற்றோரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே அந்த சிறுமி ஒரு விவசாய நிலத்தில் மயங்கி கிடந்துள்ளார். காவல்துறையினர் சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்த புகாரில் 14 வயதுள்ள தங்கள் மகள் வீட்டில் தனியாக இருக்கும் போது நான்கு பேர் சேர்ந்து வந்து கடத்திச் சென்றதாக கூறியுள்ளனர். கடத்திய கும்பல் சிறுமியை வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி மயங்கியதால் அங்கேயே விட்டு சென்றுவிட்டதாகவும் புகாரில் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் சந்தேகப்படும் நபர்களின் பெயர்களையும் காவல்துறையினரிடம் கூறினர்.
பின்னர் சிறுமி கண்விழித்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது சிறுமி காதலனுடன் காட்டுப்பகுதிக்குள் சென்றதாகவும் அப்போது தான் நான்கு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் காதலனுக்கும் இந்த சம்பவத்தில் பங்கு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.