காவலர்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்..
தமிழகத்தில் காவலர்கள் சிலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணங்களை இழந்து தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.. அந்த வகையில் சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகாவை சேர்ந்த 24 வயதான வேலுச்சாமி என்ற ஆயுதப்படை காவலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 7 லட்சம் வரை இழந்துள்ளார்..
இதனால் மனம் உடைந்து போன அவர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது தொண்டைக்குழியில் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.. அப்போது அங்கு பணியில் இருந்த சக காவலர்கள் அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.. துப்பாக்கி குண்டு மூளையை துளைக்காததால் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..
இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவலர்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.. அவர் கூறியதாவது, காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாடி அதிக அளவில் பணத்தை இழந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. காவலர்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபடக்கூடாது.. காவலர்களின் இந்த செயலால் அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் உட்பட குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். காவலர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இப்படி நடந்தால் காவல்துறை நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்..