காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து 1-வது வார்டு பகுதியான பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊர் தலைவர் கருப்பசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், துணை தலைவர் கல்யாண சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.