இந்தியாவில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. தற்போது தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் இருக்கிறது. அத்துடன் காற்றின் தர குறியீடு மிகவும் மோசமடைந்து வருவதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தகவல் தெரிவித்து உள்ளது. அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு பின் காற்று மாசுபாடு முன்பைவிட அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் காற்று மாசுபாட்டிற்கு ஒருவகை காரணமான வாகன புகையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டு வருகிறது. நாம் தினசரி பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து தான் பெருமளவு புகை வெளியேறுகிறது.
இதை தடுக்கும் விதமாக மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவை அடுத்து நொய்டா மாநகராட்சி நகரில் டீசல் வாகன பயன்பாடு படிப்படியாக நிறுத்தப்படும் என தெரிவித்து உள்ளது. இந்த டீசல் வாகனங்களானது அதிகளவு நச்சுகலந்த வாயுக்களை வெளியிடுகிறது. இதன் காரணமாக டீசல் வாகனங்களை நிறுத்தி அதற்கு பதில் இயற்கை எரிவாயு வாகனங்களை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. அதற்குரிய முதற்கட்ட முயற்சிகளும் இப்போது எடுக்கப்பட்டுள்ளது.