Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கார் ஷோரூம்: ரூ.43 லட்சம் மோசடி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. பரபரப்பு….!!!!

கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் பிரசன்னா ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கார் ஷோரூம் இருக்கிறது. இங்கு சேலத்தை சேர்ந்த வெங்கட சுப்பிரமணியன் (30) என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். 1 மாதமே பணிபுரிந்த அவர் திடீரென வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த கார் ஷோரூமின் மேலாளர் அங்கு உள்ள கணக்குகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்ற வாரத்தில் அந்த கார் ஷோரூமின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய்.43 லட்சம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டிருந்தது.

உடனே இது தொடர்பாக அந்த ஷோரூமில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்திய போது, யாரும் மூர்த்தி என்பவரின் வங்கிகணக்குக்கு பணம் அனுப்பவில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து கார் ஷோரூம் நிர்வாகிகள் கோவை ராஜ வீதியிலுள்ள சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அவற்றில் கடந்த வாரத்தில் வங்கிக்கு வந்த ஒரு நபர் ரூபாய்.43 லட்சத்துக்கான காசோலையை கொடுத்ததாகவும், அதனை மற்றொரு வங்கிகணக்குக்கு பரிமாற்றம் செய்வதற்கான ஆர்.டி.ஜி.எஸ். விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டு கொடுத்ததாகவும் கூறினார்கள். இந்நிலையில் வெங்கட சுப்பிரமணியன்தான் அந்த காசோலையை கொண்டுவந்து பணத்தை மோசடிசெய்தது தெரியவந்தது.

இதுபற்றி புகாரின்படி கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் குற்றவாளிகளை கண்டறிய மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் உத்தரவின்படி, துணை கமிஷனர் (தலைமையிடம்) சுகாசினி கண்காணிப்பில் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் காவல்துறையினர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பின் அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கார்ஷோருமில் பணிபுரிந்தபோது வெங்கட சுப்பிரமணியன் காசோலையை திருடி அவற்றில் போலி கையெழுத்திட்டு வங்கியிலிருந்து பணமெடுத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதற்கு அவரின் நண்பர்களான விழுப்புரத்தை சேர்ந்த கார்த்திக், தினேஷ், சிவா போன்றோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் கார்த்தி உட்பட 3 பேரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து ரூபாய்.43 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அத்துடன் தலைமறைவான வெங்கட சுப்பிரமணியனை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசில் புகார்கொடுத்து ஓரிரு தினங்களில் 3 பேரை கைது செய்ததுடன், பணத்தை மீட்ட காவல்துறையினரை கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Categories

Tech |