விஜய் சேதுபதியின் 96 திரைப்படத்தில் நடித்து வர்ஷா பொல்லம்மா பிரபலமானார். இவர் விஜய்யின் பிகில் படத்திலும் நடித்திருந்தார். சதுரன், வெற்றிவேல், இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன் ஆகிய படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். இந்நிலையில் வர்ஷா பொல்லம்மா கார் ஓட்டுநர்களுக்கு அறிவுரை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ”அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது என்னவெனில் மழை நேரத்தில் நீங்கள் கார் ஓட்டும் போது சுற்றி இருப்பவர்களை பற்றி யோசியுங்கள்.
அதாவது நீங்கள் சவுகரியமாக இருந்து காரை ஓட்டுகிறீர்கள். அப்போது உங்கள் பக்கத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், ஆட்டோக்களில் செல்பவர்களுக்கு சவுகரியமாக இருக்காது. நீங்கள் வேகமாக காரை ஓட்டும் போது சாலையில் கிடக்கும் தண்ணீர் இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது தெளிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் சிரமப்படுவார்கள். இதை கருத்தில்கொண்டு மழை நேரத்தில் காரை மெதுவாக ஓட்டி செல்லுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.