ஈரோட்டில் நடந்த விபத்தில் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வா.உ.சி தெருவில் கார் டிரைவரான ராஜேந்திரன்(53) என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் ஈரோடு கச்சேரி தெருவில் கார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது கார் தாலுகா அலுவலகத்தை கடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காரை இயக்கியபடியே ஸ்டியரிங்கை பிடித்த நிலையில் மயங்கியுள்ளார்.
இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி ஓடி ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் சிக்னலில் நின்ற ஸ்கூட்டர் மீது மோதி அதற்கு முன் இருந்த பஸ் மீது மோதி நின்றது. ஸ்கூட்டர் பேருந்துக்கு அடியில் போனது. இந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த ஈரோடு கருங்கல்பாளையம் ஜானகியம்மாள் பகுதியில் வசித்து வந்த திருமலைசாமி(55) மீது மோதியதால் அவரது முதுகுத் தண்டு வடமும், காலும் முறிந்து பலத்த அடிபட்டது.
உடனே அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் காவல்துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்த திருமலைசாமியையும், மாரடைப்பால் மயங்கி கிடந்த ராஜேந்திரனையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரனும், திருமலைசாமியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதுகுறித்து ஈரோடு டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.